Suresh - Knowledge Sharing
Follow Suresh on Twitter
 
விமர்சிக்கும் உலகம் இது

பட்டினத்தார் எத்தனை பெரிய துறவி? கோடிக்கணக்கான சொத்தை அப்படியே விட்டுவிட்டுக் கோவணத்துடன் வெளியேறிய கடுந்துறவி. சோற்றாசை கூட இல்லாத சந்யாஸி. கையில் ஓடு வைத்திருந்த பத்திரிகிரியாரைத் சொத்து வைத்திருக்கும் குடும்பஸ்தன் என்று கிண்டலடித்த அப்பழுக்கற்ற துறவி. அவரையே உலகம் என்ன பாடுபடுத்தியது தெரியுமா?

நடந்த களைப்பால் வயலில் படுத்திருந்தார் பட்டினத்தார். அறுவடை நடந்திருந்த வயல் அது. குச்சி குச்சியாய்ப் பூமியில் இருந்து கிளம்பி அறுபடாதிருந்த வைக்கோல் அவர் உடம்பில் குத்திக் கொண்டிருந்தது. அதைச் சட்டை செய்யாமல் (சட்டை இல்லாமல்) படுத்துக் கிடந்தார். இருக்கும் போதே இறந்து போன மாதிரி இருந்தார்.

அந்த வழியாகப் போன இரண்டு பெண்கள் வரப்பு வழியாக நடந்து போக முடியாதபடி பட்டினத்தார் வரப்பு மீது தலைவைத்துப் படுத்திருந்தார். ஒரு பெண்மணி, “யாரோ மகானா!” என்று அவரை வணங்கி வரப்பிலிருந்து இறங்கி நடந்தார். மற்றொரு பெண்மணியோ, “ஆமாம்… ஆமாம்… இவரு பெரிய சாமியாராக்கும்… தலையணை வைச்சுத் தூங்கறான் பாரு… ஆசை பிடிச்சவன்” என்று கடுஞ்சொல் வீசினார். அவர்கள் அங்கிருந்து போனதும் எழுந்து உட்கார்ந்த பட்டினத்தார், “ஆஹா… நமக்கு இந்த அறிவு இது நாள் வரை இல்லையே” என்று வருந்தி வரப்பிலிருந்து தலையைக் கீழே வைத்துப் படுத்தார்.

சற்று நேரத்தில் அந்த இரண்டு பெண்களும் அதே வழியாகத் திரும்பி வந்தனர். வரப்பிலிருந்து தலையை இறக்கிக் கீழே வைத்திருந்த பட்டினத்தாரைப் பார்த்து முதல் பெண் பரிதாபப்பட்டு, “பார்த்தாயா… நீ சொன்னதைக் கேட்டு உடனே கீழே இறங்கிப் படுத்துட்டாரூ… இப்பவாவது ஒத்துக்கோ… இவரு மகான்தானே…! என்றார். அந்த பெண்மணியோ, தனக்கே உரித்த பாணியில் “அடி போடி… இவனெல்லாம் ஒரு சாமியாரா? தன்னைப் பத்தி யார் யாரு என்ன என்ன பேசுறாங்கன்னு ஒட்டுக் கேட்கிறான்… அதைப் பத்திக் கவலைப்படறான். இவனெல்லாம் ஒரு சாமியாரா?” என்று ஒரு வெட்டு வெட்டினாள். பட்டினத்தாருக்குத் தலை சுற்றியது. 

எப்படி இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும். இது பேருண்மை. தரமானவர்களின் தரமான விமர்சனத்தை மதிக்க வேண்டும். விமர்சிக்க வேண்டும் என்கிற வெறியுடன் விமர்சிக்கிறவர்கள் விமர்சனத்தைப் புறக்கணியுங்கள்!!!




Leave a Reply.


Here you can read General Knowledge, Interesting Facts, Tamil, English, Download Tamil books, quiz, play games, read story and much more fun...