Suresh - Knowledge Sharing
Follow Suresh on Twitter
 
அசாதாரண மனிதர்கள் – II

அது ஒரு நாலு வயதுக் குழந்தை. ஆசை ஆசயாய் அந்தக் குழந்தையை அலங்காரம் செய்து பள்ளிக்கூடம் அனுப்பினாள் அம்மா. அந்தக் குழந்தைக்கு கொஞ்சம் காது மந்தம். ‘டாமி’ என்பது குழந்தையின் செல்லப் பெயர். மனம் நிறைய கனவுகளுடன் அந்தக் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிய தாயாருக்கு நெஞ்சு நிறைய சோகங்களை பரிசளித்தார் ஓர் ஆசிரியை. மூன்று மாதம் பள்ளிக்கூடம் சென்று வந்த அந்தக் குழந்தையின் சட்டைப்பையில் ஒரு காகிதத்தை திணித்து அனுப்பியிருந்தார் ஆசிரியை. “படிப்பதற்கு இலாயக்கற்ற முட்டாள் உங்கள் டாமி. இவனை இனிமேல் பள்ளிக்கு அனுப்பித் தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று அதில் எழுதியிருந்தது. குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு அந்தத் தாய் சொன்னாள், “என் மகன் அறிவாளி. நானே படிக்க வைப்பேன். அறிவாளி ஆக்குவேன்” என்று ஆவேசமாக அறிவித்தாள். “படிக்கலாயக்கில்லை” என்று முத்திரை குத்தப்பட்ட அந்த பையனைப் பற்றி, அவன் கண்டுபிடிப்புகள் பற்றி இன்றைக்குக் கூடப் பிள்ளைகள் படித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த முட்டாள் டாமிதான் 1093 கண்டுபிடிப்புகள் நிகழ்த்திய தாமஸ் ஆல்வா எடிசன். பள்ளிக்கூடம் போகாத பையனைப் பற்றி பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாக இன்று பாடம் நடக்கிறது போதுமா? சாதாரண மனிதர்களே அசாதாரணர்கள்.

எடிசனுடைய அறுபத்து ஏழாவது வயதில் அவருக்கு நேர்ந்த விபத்து தாங்கக்கூடியதே அல்ல. பாடுபட்டு அவர் உருவாக்கிய பல லட்சம் பொறுமான அவரது ஆய்வுக்கூடம், தொழிற்சாலை பற்றி எரிந்தது. இன்ஷீரன்ஸ் தொகையோ அதிகம் வராது. பற்றி எரியும் தொழிற்கூடத்தைப் பார்த்து எடிசன் சொன்னார். “நல்லது. என் தவறுகள் யாவும் எரிந்து போயின. என் பிழைகள் யாவும் கருகிவிட்டன. இந்த அழிவிலும் ஒரு நன்மை இருக்கிறது. கடவுளுக்கு நன்றி. இனி ஒரு புதிய தொடக்கம் உண்டு” என்றார். இந்த தீ விபத்து நடந்த மூன்றே வாரத்தில் அவர் ‘போனோகிராப்’ என்பதைக் கண்டுபிடித்தார்.

 
வெற்றியின் இரகசியம்

தாமஸ் ஆல்வா எடிசன் வேறு எந்த மனிதரைக் காட்டிலும் அதிகமான தோல்விகளைச் சந்தித்தார். அந்த அனுபவ அறிவைக் கொண்டு வேறு எந்த மனிதரைக் காட்டிலும் அவர் அதிகமாக வெற்றி பெற்றது இயற்கை. 1093 கண்டுபிடிப்புகள் அவர் பெயரில் உள்ளன.

ஞபாகமிருக்கட்டும் எடிசன் ஒரு நாளைக்கு 18 மணிநேரம் முயற்சி செய்த காரணத்தினால்தான் 1093 புதிய பொருட்களைக் கண்டுபிடிக்க முடிந்தது. கோடிக்கணக்கான டாலர்களைச் சம்பாதிக்கவும், மனித சமுதாயத்துக்கு அளவிட முடியாத தொண்டு செய்யவும் முடிந்தது. இந்தக் கண்டுபிடிப்புகளெல்லாம் கடுமையான உழைப்பின் பலன்களே தவிர, எங்கிருந்தோ வந்து குதித்த எண்ணங்களின் விளைவுகள் அல்ல!

அவர் கூறியது போல, “ஒரு மேதையின் புத்திசாலித்தனம் - ஒரு சதவிகிதம் திடீரென்று உதிக்கும் யோசனைகளிலும், 99 சதவிகிதம் வியர்வையிலும் அடங்கியிருக்கிறது”. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைப்பதன் மூலம் அதை அவர் நிரூபித்துக் காட்டினார்.

மின்சாரத்தைக் தேக்கி வைக்கும் ஸ்டோரேஜ் பாட்டரியைக் கண்டுபிடிக்கப் பத்துவருடம் உழைத்தார்! அவரும் அவரது உதவியாளர்களும் 17,000 வகைத் தாவரங்களைப் பரிசோதித்துப் பாகுபாடு செய்து பின்னர் ஒரே ஒரு மரத்திலிருந்து லேடக்ஸ் என்னும் பொருளை வடிக்கும் முறையைக் கண்டுபிடித்து வெற்றி அடைந்தார்கள்! ஒரு முறை வெற்றியடையும் பொருட்டு 17,000 முறை தோல்வியடைய தயாராக இருந்தார்.

தோல்வி என்பது வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்களில் ஒன்றே தவிர அதில் அவமானம் ஏதும் இல்லை. தோல்வி கற்றுத்தரும் பாடத்தை நீங்கள் ஆவலுடன் கற்க வேண்டும். தோல்வியைக் காட்டிலும் சிறந்த ஆசான் இருக்க முடியாது என்பதை உணருங்கள். நீங்கள் தோல்வி அடையும் போது அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு மீண்டும் முயற்சி செய்வீர்களேயானால் தோல்வியை நீங்கள் தோற்கடித்து விடுவீர்கள். வாழ்க்கையின் மிகமுக்கியமான வெற்றிப்பாடம் அதுதான். அதைப் படியுங்கள். படித்தாற்கேற்ப வாழ்ந்து காட்டுங்கள். வெற்றி கிடைப்பது உறுதி.

முக்கிய குறிப்பு: 1093 கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான தாமஸ் எடிசன் (டாமி) பள்ளிக்கூடத்தில் படித்தது ஆறே மாதம்தான்.


Here you can read General Knowledge, Interesting Facts, Tamil, English, Download Tamil books, quiz, play games, read story and much more fun...